எதிரிகள், தூரோகிகள் நினைப்பில் மண் விழுந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி வருகின்ற சட்டப் பேரவையில் அதிமுகவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்றைக்கு புதன், ஒரு பொன்னான நாள்.
ஒவ்வொரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் எதிர்ப்பார்த்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் நாங்கள் ஏற்கனவே சொன்னபடி, ஒருமித்த கருத்தாக அறிவித்து இருக்கின்றோம்.
2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில் எதிரிகள், துரோகிகள் இந்த சூழ்நிலையில் கட்சி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்காதா…. அதன் மூலம் நாம் குளிர் காயலாமா என்று நினைத்தவர்களின் நினைப்பில் மண்ணை போடுகின்ற வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு, ஒருமித்த உணர்வோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.