இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக 24 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான போலி பல்கலைக்கழகங்களை உத்திரப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 2, கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.
இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறும்போது, “பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்கு புறம்பாக 24 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் போலி பல்கலைக்கழகங்கள் ஆக சட்டப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி இந்த பல்கலைக் கழகங்கள் எந்த பட்டத்தையும் வழங்குவதற்கு அதிகாரம் கிடையாது”என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.