மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் தமிழ்தாசன் மேரி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் இருக்கின்றனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தமிழ்தாசன் மரணமடைந்ததால் மேரி தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். 5 மகள்களில் இருவருக்கு திருமணம் முடிந்த நிலையில் மற்ற மூன்று பேரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகின்றனர். மேரியின் 19 வயதான கடைசி மகளை 38 வயதான லாரி ஓட்டுநர் முருகன் ஐந்து வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததுடன் மேரியிடம் அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு பெண்ணின் தாய் மேரி மறுத்துவிட்டதால் முருகன் அவர் மீது கோபத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் மேரியின் இரண்டாவது மகள் மற்றும் அவரது கணவர் இருவரும் மேரியை பார்க்க வந்திருந்த போது வீட்டின் வாசலில் நின்று மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த லாரி ஓட்டுனர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக மேரியை தாக்கியுள்ளார். அவரை தடுக்க முயன்ற அக்கம்பக்கத்தினரயும் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அவ்வழியாக வந்த ரவி என்பவரது இரண்டு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மேரி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேரி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநர் முருகன் தனக்கு பெண் கொடுக்காத கோபத்தில் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் லாரி ஓட்டுநர் முருகனை தேடி வருகின்றனர்.