சேலம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு சுருக்கமுறை திருத்தம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்படி சேலம் மாவட்டத்தில் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர்.
14 லட்சத்து 83 ஆயிரத்து 369 பேர் ஆண்களும், 14 லட்சத்து 85 ஆயிரத்து 133 பெண்களும், 171 இதர பிரிவினர் என மொத்தம் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் வருகின்ற 15ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் நேரடியாக சென்று வாக்காளர்கள் தங்கள் பெயர் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சந்தேகம் ஏற்பட்டால் எழுத்துப்பூர்வமாக அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் புகார்களை கொடுத்தால் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.