பொறியியல் படிப்பில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 7-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 2413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறயுள்ளது.
ஒவ்வொரு கட்ட கலந்தாய்வு முடிவிலும் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் தொழில் பிரிவினருக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும்போது 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் விருப்ப பாடத்தை தேர்வு செய்யவேண்டும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.