தேனியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மிட்டாய் கடை 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
தற்போதைய 2k காலகட்டத்தில் இருப்பவர்கள் அறிந்திராத பல உணவுப் பொருட்களை 90ஸ் கிட்ஸ்கள் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். தற்போதைய காலத்தில் உள்ள பிட்ஸா, கேஎப்சி போன்ற உணவு பொருட்களையும் 90ஸ் கிட்ஸ்கள் ருசித்தது உண்டு. ஆனால் 90ஸ் காலத்திலுள்ள மிட்டாய்களை 2k கிட்ஸ்கள் சாப்பிட்டிருக்க முடியாது. தற்போது அவர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்கள் மீண்டும் பழக்கத்திற்கு வரத்தொடங்கியுள்ளது.
சென்னையில் 90 கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு மிகவும் பிரபலமானது. தற்போது அதே போன்று தேனியிலும் கடை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வல்லிக்கண்ணன் என்பவர் தேனியில் ஆரம்பித்திருக்கும் இந்த கடையில் எள்ளு உருண்டை, ஆரஞ்சு மிட்டாய், கமர்கட், ஜெல்லி, மம்மி டாடி, பேப்பர் தோசை என 96 வகையான 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள் விற்கப்படுகின்றது. தேனியில் இருக்கும் அனைத்து 90ஸ் கிட்ஸ்களையும் இந்த கடை தன் வசம் ஈர்த்து வருகிறது.
இந்த கடைக்கு செல்லும் 90ஸ் கிட்ஸ்கள் அவர்கள் சிறு வயதில் சாப்பிட்ட மிட்டாய்கள் இருக்கின்றதா என்று கேட்டு கேட்டு வாங்குகின்றனர். அதோடு திருமணம் முடிந்து குழந்தையுடன் இருக்கும் 90ஸ் கிட்ஸ் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் சாப்பிட்ட மிட்டாய்களை வாங்கி கொடுத்து மகிழ்கின்றனர். இந்த கடையில் அனைத்து மிட்டாய்கள் 10 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.