சீனப் பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது.
சீனாவின் பெரிய இறக்குமதி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்ந்து வருகின்றது. ஆனால் தனது நாட்டு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து லாபம் ஈட்டிய சீனா இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை தொடங்கியது. இதனால் மத்திய அரசு சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சீனாவின் டிக் டாக் உட்பட 200க்கும் மேற்பட்ட செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சாலை போக்குவரத்துத்துறை, ரயில்வே துறை, மின்சாரத் துறை போன்ற பல துறைகளில் சீனாவுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் முறிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்கள் நம் நாட்டோடு வர்த்தகம் செய்வதற்கான புதிய விதிமுறைகள் அடங்கிய பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு முக்கிய தொழில் நுட்பமாக இருக்கும். 5G தொழில்நுட்பத்தை நிறுவுவதில் சீனாவை சார்ந்து இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு ஜப்பானிடம் இருந்து புதிய தொழில் நுட்பங்களை பெற முடிவு செய்துள்ளது.
அதோடு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தேவைகள் வந்தால் அமெரிக்காவிடம் இருந்தோ ஐரோப்பிய நாடுகளிடமிருந்தோ கருவிகளை பெறுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தொலைத்தொடர்புத் துறையில் மட்டுமல்லாது சாலை, மின்சாரம், ரயில்வே, எரிசக்தித் துறை உள்ளிட்ட பல போக்குவரத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்வதாக கூறப்படுகிறது.
அதாவது ஒப்பந்தப் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கும் நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் அது எந்த நாட்டின் தயாரிப்பு அதன் முழு விவரங்கள் போன்றவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு விதிகளை கொண்டுவரும் நடவடிக்கையை மத்திய அரசுஎடுத்து வருகிறது. இதன் மூலமாக சீனாவிலிருந்து வரும் பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.