புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அக்டோபர் 8 முதல் மீண்டும் வகுப்புகள் துவங்கின.
கடந்த 5 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான இருக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்கள், 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 3 நாட்கள் என வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது என்றும் பெற்றோர் ஒப்புதலுடனே பள்ளிகளுக்கு வர வேண்டும் எனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோலக் கைகளையும் சுத்தம் செய்தனர். பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் வகுப்புகளில் ஒரு பெஞ்சில் இருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டு, சந்தேகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவிலான மாணவர்களே வருகை புரிந்தனர்.