மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த வந்தார். பீகார் மாநிலம் தக்காரி யார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று தினங்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மகன் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். திரு. ராம்விலாஸ் பஸ்வான் எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மறைவின் மூலம் நாடு ஒரு தொலைநோக்குயுள்ள தலைவரை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும் நீண்டகாலம் பணியாற்றியவராகவும் அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த பஸ்வான் அம்மக்களின் மனங்களை வென்றவர் என குடியரசு தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ராம்விலாஸ் மறைவால் யாரும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு ஒரு தனிப்பட்ட இழப்பு என்றும் நண்பனையும் மதிப்புமிக்க சகல ஊழியரையும் ஏழைகள் கௌரவம் மிக்க வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த ஒருவரை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ராம்விலாஸ் பஸ்வான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.