கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி டெம்போ டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில் காயமடைந்த மினி டெம்போ ஓட்டுநர் காவல்துறைக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விலை பகுதியில் இருந்து ரத்தினம் என்பவர் ஓட்டிய டேங்கர் லாரி ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது நாகர்கோவிலில் இருந்து வேகமாக வந்த மினி டெம்போ வாகனம் மோதியது.
இதில் மினி டெம்போ பெரும் சேதம் அடைந்த நிலையில் அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் காயமடைந்தார். ஆனாலும் ஓட்டுனர் திடீரென இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த லாரி ஓட்டுனர் ரத்தினம் கீழே இறங்கிச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது டெம்போவில் இருந்த வாழைத்தார்கள் சாலையில் சிதறிக் கிடப்பதையும், அவற்றிற்கிடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் கண்டுள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் உணவு கடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.