தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சள் நீர் காயல் ஊராட்சியில் சுமார் 500 நூற்றுக்கு குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 10 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மூன்று பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கபடவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனுவில் அவர்கள் வெளியில் வீடு கட்ட உள்ளதாகவும் வீடு கட்டுவதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் 4 தவணை முறையில் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே தங்கள் பெயரில் வீடு கட்டி அதில் பல லட்சம் ரூபாய் ஊழல் செய்து இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.