பெங்களூரு போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையவர்களை தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் பிரபல நடிகை தப்ப வைத்ததாக தெரிவித்த தகவலின் பேரில் அந்த நடிகைக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் விவகாரத்தில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகினி, சஞ்சனா மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையர் வீரன், ராகுல், ரவிசங்கர், லும் பெப்பர், உடன்நேடோ உட்பட 14-கிற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சரின் மகனான ஆதித்யா ஆழ்வார் தலைமறைவாகிவிட்டார். அவரை தப்ப வைத்தது தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை தான் என போலீஸ் பிடியில் சிக்கியுள்ள முன்னால் நிழல் உலக தாதா முத்தப்பராகின் மகன் ரிக்கிராய் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த நடிகை குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து உள்ள பெங்களூரு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஒருவேளை அவர் ஆஜராகவிட்டால் அவரது வீடுகளில் சோதனை மற்றும் கைது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டம் தீட்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.