Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி விடுதலையை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் …!!

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 12-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் விச்சி குடும்பத்தைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் வெங்கடாஜலம் என்பவரின் 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்தான். கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஒரு மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட இளைஞரை போதிய ஆதாரம் இல்லை என கூறி விடுதலை செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மூன்றாயிரம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டனர். திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மௌன அஞ்சலி போராட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு சிறுமியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் தமிழக அரசை கண்டித்து முழக்கம் அலுப்பினர். குற்றவாளி தண்டிக்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நாகர்கோவிலில் அரசு பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் 150-க்கும் மேற்பட்டோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை வேண்டுகோளை ஏற்று 400-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் ராமநாதபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Categories

Tech |