உத்திரபிரதேசத்தில் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்து இன்று அதிகாலை அலிகார் என்ற மாவட்டத்தில் உள்ள தபால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த கொடூர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமன்றி காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஆணையிட்டுள்ளார்.