காற்றாலை நிறுவன சிஇஓ விடம் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி கேலி செய்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் காற்றாலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் டென்மார்க் நாட்டை சேர்ந்த சி இ ஓ ஹென்றிக் ஆண்டர்சன் என்ற நபரிடம் பிரதமர் மோடி பேசும்போது, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமல்லாமல் காற்றிலிருந்து சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான ஆக்ஸிஜன் ஆகியவை பிரித்து எடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா?”என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி பேசிய அந்த வீடியோ தொகுப்பை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, “இந்தியாவிற்கு உண்மையான ஆபத்து என்னவென்றால், நம்முடைய பிரதமருக்கு புரியாமல் இருப்பது அல்ல.
அவரை சுற்றி இருக்கின்ற ஒருவருக்கு கூட அவரிடம் உண்மையை சொல்ல துணிச்சல் இல்லை என்பதே”என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களே மோடியின் கருத்தை அங்கீகரிக்கின்ற போது, ராகுல் காந்தி பிரதமர் மோடியை கேலி செய்கிறார்.ராகுல் காந்திக்கு புரிந்து கொள்ளும் சக்தி இல்லை என்று அவரிடம் கூறுவதற்கு அவரை சுற்றியுள்ளவர்களுக்கு துணிச்சல் கிடையாது”என்று அவர் கூறியுள்ளார்.