ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கொரோணா பரிசோதனை செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக பரிசோதனை செய்யச் சென்ற மருத்துவ குழு கூறியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற உள்ளூர் தலைவர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்,பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அந்த குடும்பத்தினரை கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவ குழு முடிவு செய்தது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்களை கொரோனா பரிசோதனை செய்வதற்கு மருத்துவ குழு திட்டமிட்டது. அதன்படி அவர்கள் வீட்டிற்கு நேரடியாக மருத்துவர்கள் சென்றனர். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் எவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.