கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் துணைத் தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலில் வகுப்பைச் சேர்ந்த திருமதி. இராஜேஸ்வரி இருந்து வருகிறார். கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது திருமதி. ராஜேஸ்வரி தரையில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற துணை தலைவர் மோகன்ராஜ் ஊராட்சி செயலாளர், சிந்துஜா ஆகியோர் தூண்டுதலின் பேரில் திருமதி. இராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக புவனகிரி காவல் நிலையத்தில் திருமதி. ராஜேஸ்வரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட புவனகிரி காவல்துறையினர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தெற்கு திட்டாய் ஊராட்சி செயலர் சிந்துஜாவை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. சந்திரசேகரன் சகாமூவி உத்தரவிட்டார்.