கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் எங்களுக்கு எதிராக ஈரான் தீய செயல்கள் செய்தால் இதுவரை பார்க்காத அளவிற்கு கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கக்கூடும். நிச்சயம் அதனை செய்ய தவற மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றியடைந்தால் அணு ஆயுத ஒப்பந்தம் ஈரானுடன் மறுபடியும் போடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் முக்கிய போர்த் தளபதி காசிம் சுலைமானி சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதற்கு பலி தீர்க்க ஈராக்கில் இருந்த அமெரிக்க இராணுவத் தளத்தில் ஈரான் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர். இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் சூழல் இருந்து வருகிறது. ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடை விதிப்பதால் ஈரான் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு போர் தளபதியான சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா பதில் சொல்ல வேண்டும் என்று ஈரான் பகிரங்கமாக கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.