மக்கள் மீது அக்கறை இருந்தால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் கர்நாடகாவில் இருக்கும் உயர்நிலை பள்ளிகளை திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. கல்பர்கி மாவட்டத்திலிருக்கும் டியூசன் சென்டரில் படித்துவந்த மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை செய்ய மாநில முதல்வர் எடியூரப்பா, கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் ஆன்லைன் மூலமாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனிடையே இந்த வருடம் பள்ளிகளை திறந்தால் பேரழிவு ஏற்படும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளார். இதுகுறித்து எச்.டி.குமாரசாமி கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் பள்ளிகளை திறந்தால் பேரழிவு ஏற்படும். முதல்வருக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் எந்த காரணத்திற்காகவும் பள்ளிகளை திறக்கக்கூடாது. செயல்திறன் மற்றும் செயல்பாடு அடிப்படையில் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்தாக வேண்டும். பள்ளி மட்டுமல்லாது கல்லூரிகளிலும் 2021 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம். டியூசன் சென்டர்களில் படிக்கும் மாணவர்கள் தொற்றுக்கு இலக்காகி வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது நோக்கி மாநில அரசு அடி எடுத்து வைப்பது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.