தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமமுகவின் கொடிக்கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்ற சம்பவம் கழகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையில் போலீசாரும், அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணி சேர்வைபட்டியில் அமமுகவின் கொடி கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் வட்டாட்சியர் தலைமையில் நேற்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். வட்டாட்சியரும், காவல்துறையினரும் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அமமுகவினர் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று சூளுரைத்து உள்ளனர்.