இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கின்ற 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு மிக அருமையான வீடுகள் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,கர்நாடக மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், “லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற வரலாற்றில் முக்கியமான நாளில் இந்த சிறந்த பணியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வாழ்கின்ற கோடிக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகள் இல்லாமல் இருந்துள்ளன. ஆனால் இன்று கிராமப்புறங்களில் வசித்துக் கொண்டிருக்கும் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு மிக அருமையான வீடுகள் கிடைத்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.