Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 65,000 தேயிலை விவசாயிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 119 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் 65 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு கோடி கிலோ பசுந்தேயிலை பறிக்கப்படாமல் வீணானதால் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப்பின் பசும் தேயிலைக்கு கடந்த இரண்டு மாதங்களாக கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரை கிடைத்து வந்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயத்தை தென்னிந்திய தேயிலை வாரியம் ஒரு கிலோவிற்க்கு 30 ரூபாய் என நிர்ணயித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை தொழிற் சாலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

ஆனால் இம்மாவட்டத்திலுள்ள 119 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இதனை ஏற்காமல் இருப்பதுடன் விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலை தரமற்றதாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால் இத்தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதல் செய்யாமல் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக நன்கு விளைந்த 2 கோடி கிலோ பசும் தேயிலையை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவை தோட்டத்திலேயே வீணாகி விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |