டீ வாங்குபவர்களுக்கு இலவசமாக முக கவசம் கொடுக்கும் டீக்கடை உரிமையாளரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது
சென்னையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்ற டீக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில் 10 ரூபாய் கொடுத்து டீ வாங்கினால் அதற்கு இலவசமாக முக கவசம் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த கடையின் முகவர் ப்ரீத்தி கூறுகையில், “அரசு பொது மருத்துவமனை அருகே இருக்கும் டீக்கடையிலும் வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை அருகே உள்ள டீக்கடையில் காசு கொடுத்து டீ வாங்குபவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் கொடுத்து வருகிறேன்.
தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் வரை நான் தொடர்ந்து இந்த சேவையை செய்வேன். முக கவசத்தை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றுவதற்குக் காரணமே மக்கள் தான். மருத்துவமனை அருகே முக கவசம் இல்லாமல் வந்தவர்களிடம் விசாரித்தபோது 10 ரூபாய் கொடுத்து முக கவசம் வாங்குவதற்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொள்ளலாம் என பதில் கூறினர்.
முகக் கவசத்தை நான் மொத்தமாக வாங்கி விடுவதால் குறைந்த விலையில் கிடைக்கும். எனவே டீ வாங்குபவர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றேன். அனைவரும் முக கவசம் அணிய தொடங்கினால் தொற்று பரவாமல் தடுக்க முடியும். இதனால் அரசுக்கு என்னால் முடிந்த வகையில் உதவும் நோக்கத்தில் செய்து வருகின்றேன்” என்றார் ப்ரீத்தி.