பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடும் படி எந்த கடவுளும் கேட்கவில்லை என்றும் தற்போது கொரோனாவை எதிர்த்து போராடுவதே முதல் தர்மம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடங்க உள்ளதால் உயிரை பணயம் வைத்து பண்டிகை கொண்டாட வேண்டுமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடும் நிலை ஏற்படுவதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் எந்த மதமும், கடவுளும் ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும் பண்டிகைகளை கொண்டாட சொல்லவில்லை என தெரிவித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து வைரசுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் விழாக்களின் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.