தங்கையுடன் நட்பாக பழகி வந்த இளைஞரை சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியில் இருக்கும் பல்கலைகழகம் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ராகுல். இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். ஆனால் பெண்ணின் சகோதரர்கள் ராகுலும் அவர்கள் தங்கையும் காதலிப்பதாக நினைத்தனர். இதனால் பலமுறை ராகுலிடம் தனது தங்கையுடன் சுற்ற வேண்டாம், அவளை மறந்து விடு, இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்கு ராகுல் நான் நட்புடன் தான் உங்கள் தங்கையுடன் பழகி வருகின்றேன். எங்கள் இடையே காதல் இல்லை என்று கூறியுள்ளார்.
அதோடு தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் ஊர் சுற்றுவது தொலைபேசியில் பேசுவது என்று இருந்துள்ளார். இதனால் சகோதரர்கள் கோபம் கொண்டு ராகுலை நந்தா பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு சென்ற ராகுலை சகோதரர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இதில் உயிரிழந்த ராகுலின் சடலத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ராகுலின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது அவரது மண்ணீரல் சிதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ராகுல் நட்புடன் பழகி வந்த பெண்ணின் சகோதரர்கள் தான் கொலை செய்தனர் என்பது தெரியவந்தது. இதனால் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.