கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை செய்து வருகிறது. இருந்தாலும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன.அந்த அமர்வுகளில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் மட்டுமே இருந்ததால் தினந்தோறும் 20 வழக்குகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று முதல் சுப்ரீம் கோர்ட் முழுமையாக இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 12 அமர்வுகள் மூலமாக 30 நீதிபதிகளும் வழக்குகளை விசாரணை செய்வார்கள்.அதில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளை கொண்ட பத்து அமர்வுகள் மற்றும் ஒற்றை நீதிபதி கொண்ட இரண்டு அமர்வுகள் வழக்குகளை விசாரணை செய்யும். அதே சமயத்தில் அந்த அமர்வுகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாக வழக்குகளை விசாரணை செய்கின்றன. அவ்வகையில் முழு அமர்வு களும் வழக்கு விசாரணையில் ஈடுபட உள்ளதால் தினம்தோறும் 40 வழக்குகளுக்கு மேல் விசாரணை செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.