தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க 22,902 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதை தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கியது. முதல் சுற்றில் பங்கேற்ற 12 ஆயிரத்து 263 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைமுறைகள் இன்று தொடங்குகின்றன. இதில் பங்கேற்க 22 ஆயிரத்து 902 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் இன்று முதல் 15ம் தேதி வரை கட்டணம் செலுத்த வேண்டும். இதை அடுத்து அடுத்த கட்ட கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கும்.