அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக துணை வேந்தர் சூரப்பா செயல்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி பெற்ற நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை பல்கலைக்கழகம் திரட்டிக் கொள்ளும் என மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில அரசுக்கு எதிராக துணைவேந்தர் சூரப்பா செயல்படுவது மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் பல்கலைக்கழகத்தை மூன்றாண்டுகளுக்கு வழி நடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் மட்டுமே துணைவேந்தர். அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் சூரப்பாவின் செயல்பாடுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். 60 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை முறை, மாநில அரசின் கட்டுப்பாடுகளின் நிர்வாகம் ஆகியவற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெற தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.