மதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கிருஷ்ணன். இன்று காலை அவரையும் அவரது உறவினரான முனியசாமி என்பவரையும் ஒரு மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் பதற்றம் நீடித்தது. காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு வரும் வரை இருவரின் உடல்களையும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் காவல் துறையினரின் சமாதான முயற்சிக்கு பிறகு இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் சம்பவ பகுதியில் காவல் உயர் அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.