தோனி எங்களுக்கு பயம் காட்டிவிட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 (37) ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் தல தோனி தனி ஒருவராக கடைசி வரை போராடினார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட தல தோனி 24 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 1 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த போட்டியில் தல தோனி 48 பந்துகள் 84* ரன்களுடன் (7 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் வெற்றி குறித்து பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் , இந்த போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தது. 19-வது ஓவர் வரை பந்துவீச்சில் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டோம். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோலவே நடந்துவிட்டது. 1 ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி ஓவரில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அதனை தோனி செய்துவிட்டார். அவர் கடைசி ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் ஒட்டு மொத்த அணிக்கும் மிகப்பெரிய தோல்வி பயத்தை காட்டி விட்டார் என்று கூறினார்.