துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி செய்த வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வெங்கையா நாயுடுவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து குடியரசுத் துணைத்தலைவர் செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “குடியரசு துணை தலைவருக்கு இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தார்கள். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விரைவில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.