நீலகிரி மாவட்ட கலெக்டரின் பெயரில் போலி மின்னஞ்சல் துவக்கப்பட்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கலெக்டராக இருப்பவர் இன்னசென்ட் திவ்யா. இவரது பெயரில் போலியான மின்னஞ்சல் அதாவது இ -மெயில் ஐடி துவக்கப்பட்டு ஆன்லைன் வர்த்தகத்திற்கான கிப்ட் கார்டினை பெற இந்த லிங்கினை கிளிக் செய்யவும் என குறுஞ்செய்தியானது நீலகிரி மாவட்டம் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனை கேள்விப்பட்ட நீலகிரி மாவட்ட கலெக்டர் அதிர்ச்சியடைந்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை தொடர்பு கொண்ட கலெக்டர் தனது மின்னஞ்சல் இதுதான் [email protected] என குறிப்பிட்டார். மேலும் எனது பெயரில் வரும் வேறு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் லிங்கினை கிளிக் செய்யவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் செல்போன்களில் இவ்வாறு அனுப்பப்படும் லிங்கினை கிளிக் செய்வதன் மூலம் நம் செல்போன்களின் தகவல்களை எளிதாக திருட வாய்ப்புள்ளதாகவும்,எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் கலெக்டரின் பெயரிலேயே இவ்வாறு போலி கணக்குத துவங்கியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.