பண்டிகைக்கால முன் பணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படுமென நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவினை சரி செய்ய மத்திய நிதியமைச்சர் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். இதனை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொருளாதார சரிவினை சீர் செய்யவும் நுகர்வோர் வாங்கும் திறனை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
அந்த வகையில் இந்த ஆண்டு நுகர்வோரின் வாங்கும் திறனை அதிகரிக்க முன்பணமாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படுகின்றது என கூறினார்,மேலும் இந்த பணத்தினை பயன்படுத்தி 12 சதவீதத்திற்கும் அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருட்களை மத்திய அரசு ஊழியர்கள் வாங்கிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தார். ரூபே கார்டில் இந்த பணம் செலுத்தப்படுமெனவும் , 10 மாதங்களில் ரூபாய் 1000 வீதம் இந்த பணம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் இதன் மூலமாக கூடுதலாக 19,000 கோடி ரூபாய்க்கு பொருட்கள் வாங்கப்படுமென தெரிவித்தார்.