தங்களுக்கு சூனியம் வைத்ததாக நினைத்து மாமனாரை மருமகன்கள் உயிருடன் புதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேகாலயாவில் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மோரிஸ். இவர் தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மோரிசின் மருமகன்களான டிபெர்வெல், டென்சில், ஜேல்ஸ் ஆகிய 3 பேரும் தங்கள் மாமனார் அவர்களுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும், தீய சக்திகளை குடும்பத்தின் மீது ஏவி விட்டதாகவும் சந்தேகம் கொண்டனர்.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு வலுக்கட்டாயமாக நோங்டிசோங் கிராமத்திற்கு அக்டோபர் 7ஆம் தேதி அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்த போர்டிடோவுக்கு கூட்டிச் சென்று உயிருடன் புதைத்தனர். இரண்டு தினங்களாக தந்தையைக் காணாததால் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது மருமகன்கள் டிபெர்வெல், டென்சில், ஜேல்ஸ் ஆகிய 3 பேரும் மோரிஸ் சூனியம் வைத்ததாக நினைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் இந்த கொலையில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இருந்ததாக 18 பேரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.