பலத்த பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து, ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் 4 பேரும் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள தனியறையில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.விசாரணையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிடும் ஆவணத்தில் உதவி தேர்தல் அலுவலர் குருசங்கர் கையொப்பமிட மறந்துவிட்டதாகவும், ஆகையால் அந்தப் படிவத்தில் கையொப்பமிடுவதற்காக அவரது ஆலோசனையின் கீழ் அறைக்குள் சென்று ஆவணத்தை சம்பூரணம் எடுத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் விசாரணை அறிக்கையானது தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .