மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் சிலருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நிரந்தரமாக்கி அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்தனர். இந்நிலையில் தனது பணியாளர்கள் சிலர் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை நிரந்தரம் ஆக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய வழிமுறைகளை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.
அதில் நிறுவனத்தின் தகவல்கள் வன்பொருள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலில் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டதாகவும், அதேநேரம் தற்போது மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை பணியாளர்களுக்கு வழங்க மைக்ரோசாஃப்ட் முடிவு எடுத்துள்ளதாகவும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை பணியாளர்களின் செயல் திறனை அதிகரிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.