உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களிலேயே பணிக்குத் திரும்பிய துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வராததால் அதனை தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகாரிகள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் சௌமியா பாண்டே என்பவர் தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. அரசு வேலையில் இருப்பவர்கள் ஆறு மாத காலம் வரை பேறுகால விடுப்பு எடுக்கலாம் என்ற போதிலும் சௌமியா பாண்டே 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார்.
தனது கைக்குழந்தையுடன் பணிபுரிந்து வரும் இவரின் சேவையையும் உயர்ந்த எண்ணத்தையும் கண்டு மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சௌமியா பாண்டே கொரோனா காலத்தில் பொறுப்பு அதிகமாக உள்ளதால் பணிக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளார். குழந்தையை பெற்றெடுப்பதற்கு குழந்தையை பராமரிப்பதற்கும் கடவுள் பெண்களுக்கு பலம் அளித்து உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 3 வார பெண் குழந்தையுடன் தனது நிர்வாக பணிகளை சிறப்பாக செய்ய முடிவதாக சௌமியா பாண்டே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.