கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பாரம்பரிய முறைப்படி பங்கேற்பதற்காக நாளை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட உள்ளன இதற்காக இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம் போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரத்தில் புறப்பட்டு சென்றது.
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரம் கட்ட சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாள் உடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம். பின்னர் அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சுவாமி சிலைகள் பூஜை செய்யப்பட்டு விழா முடிந்ததும் மீண்டும் சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறைந்த பக்தர்களுடன் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நங்கை அம்மன் கோவிலிலிருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது. அதன் பின்னர் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. ஊர்வலத்தின் முன்பு போலீசார் வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர். இந்த ஊர்வலம் கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக பத்மநாபபுரம் அரண்மனையை இன்று அடைகிறது. அதன் பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.