சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி கடை ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
சிவகாசி பேருந்து நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திருச்சி முத்தாநத்தம் என்ற பகுதியை சேர்ந்த ஷேக் முகமது என்பவர் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடங்கள் எதுவும் அமைக்கப்படாமல்,காலி இடத்தில் கடைகள் மற்றும் தகரத்தால் அமைக்கப்பட்ட மேற்கூரையில் இந்த ஜவுளிக்கடை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அந்த கடையில் அதிக அளவு துணிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கடையில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியுள்ளது.உடனடியாக கடையில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடையை விட்டு வெளியே ஓடினர். ஆனால் அதற்குள் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மேலும் பரவ தொடங்கியது.
அதன் பிறகு மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது. சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.ஆனால் அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டது.உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. ஒரு மணி நேரம் தீவிரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த கோர தீ விபத்தில் கடையில் இருந்த ஏராளமான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.