தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரியை நேரில் சந்தித்து கனிமொழி கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரியை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், “தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்றம் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். துறைமுகத்துக்கு உரிமையான நிலங்களில் காற்றாலை மற்றும் உணவு தானியங்களுக்கான கிடங்குகள் ஆகியவற்றை ஏற்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
அது மட்டுமன்றி கடல் அரிப்பு இருக்கும் பகுதியான மணப்பாடு போன்ற இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையில் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைத்துத் தரவேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.