சொத்துவரி குறைக்க கோரி மனுதாக்கல் செய்த நடிகர் ரஜினிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக ராகவா திருமன மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் எந்த வித திருமண நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வில்லை. 6 மாதங்களுக்கு மேலாக மண்டபம் பூட்டியே இருக்கும் நிலையில்தான் இருக்கின்றது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமணமும் ரத்து செய்யப்பட்டு, பெறப்பட்ட முன் பணமும் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
வரியை குறையுங்கள்:
இந்நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் மண்டபத்திற்கான சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீசில் மீது தனது வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து… வழக்குத் தொடர்வதற்கு முன்பாக, வரியை குறைப்பது தொடர்பாக மாநகராட்சிக்கு கடிதம் எழுதலாம் என முடிவெடுத்து, செப்டம்பர் 23ஆம் தேதி வழக்கறிஞர் மூலம் ஒரு கடிதத்தை அனுப்பி னோம் என்று ரஜினி தனது மனுவில் கூறியிருந்தார்.
ரூபாய் 6 லட்சத்து 50ஆயிரம் வரி:
அந்த கடிதத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரியை குறைத்து அல்லது பாதியாக செலுத்த மாநகராட்சியில் விதி வகுக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளின்படி சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனு அனுப்பப்பட்ட ஒரு வாரத்தில் செப்டம்பர் 29-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என ரஜினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொல்லப்பட்டுள்ளது.
கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முக்கிய கோரிக்கையாக அபராதத் தொகை செலுத்த வில்லை என்றால் அடுத்த நாள் முதல் வரி செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீதிபதி கண்டனம்:
இந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமன் ஒரு மனுவை கொடுத்துவிட்டு பத்து நாட்கள் கூட ஆகாமல் நீங்கள் எப்படி நீதிமன்றத்தை நாடலாம் ? மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நினைவூட்டல் மனு என்ற ஒரு முறை இருக்கின்றதே , அதை செய்து இருக்கலாமே. ஒரு மனு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நேரம் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். இந்த மாதிரி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த உங்களின் மனுவை தள்ளுபடி செய்வது மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படும் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
பின்வாங்கிய ரஜினி:
இதையடுத்து ரஜினி தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உரிய முறையில் நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு, நினைவூட்டல் மனுவை அனுப்பிய பிறகு, நாங்கள் மனுத்தாக்கல் செய்கின்றோம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான உத்தரவை மதியம் வழங்குவதாக நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.