ஆந்திரா கடற்கரையை மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்ததால் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 20 சென்டி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது.
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவற்ற ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே நேற்று கரையை கடந்ததால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் தலரையோ என்ற இடத்தில் 24 சென்டிமீட்டர் மழை பெய்தது. தண்டவா, சாரதா, கோஸ்டாணி போன்ற சிறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கர்நாடகாவிலும் கனமழை கொட்டுகிறது. வட கர்நாடகாவில் விஜயா புறா, பிளாகவி, யாதகிரி, பாகல்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அலமத்தி, பிரசவ சாகர் அணைகள் நிரம்பியுள்ளதால் கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வட கர்நாடகத்தில் பல கிராமங்களில் இணைக்கும் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.