கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகனின் குடி பழக்கத்தை திருத்துவதற்காக மிச்சம் பிடித்து விட்டதாக தாய் கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தென் தொரசலூர் மெயின் ரோட்டில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கு வீரமணி என்ற மகன் இருக்கிறார். தொழிலாளியான வீரமணிக்கு திருமணமாகி சசி என்ற மனைவியும், கிஸ்வந்த், அஸ்வந்த் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். வீரமணியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவரின் தாய் கொளஞ்சி வீரமணியுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான வீரமணி, தனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
அதற்கு முடிவு கட்ட வேண்டுமென்று கருதிய வீரமணியின் தாய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி உள்ளார். ஒருநாள் திடீரென வீரமணியின் தாய் வீட்டில் இருந்து மாயமானார். வீட்டிற்கு வந்த வீரமணி தாய் அங்கு இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்டு மது குடிக்க பணம் கேட்டு உள்ளார். அப்போது விஷம் குடித்து மயங்கி விழுந்த தான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பதாக வீரமணியின் தாய் நாடகத்தை நடத்தியுள்ளார். அதனை உண்மை என்று நினைத்த வீரமணி மனமுடைந்து விஷம் குடித்துள்ளார்.
அதன் பிறகு தனது மனைவி சசியிடம் சென்று எனது தாய் விஷம் குடித்ததற்கு நான் காரணம் ஆகி விட்டேன். அதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. விஷம் குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் மயங்கி அவரை, அவரின் மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.