வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் பேசிய மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சிந்துஜா தம்பதியினர். தம்பதியினருக்கு மூன்று வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சிந்துஜா வீட்டிலிருந்து கணவன் மற்றும் குழந்தையை கவனித்து வந்தார். இதனிடையே அவர் தனது ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவியிடையே வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் சிந்துஜா பேசுவது தொடர்பாக தகராறு எழுந்த நிலையில் கோபம் கொண்ட மணிகண்டன் கத்தியால் சிந்துஜாவின் கழுத்தில் குத்தி கொலை செய்தார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற மணிகண்டன் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிந்துஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு மணிகண்டனை சிறையில் அடைத்தனர். தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் மூன்று வயது குழந்தை நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.