திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்துள்ள கலிங்கலேரி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவரின் 20 20 வயதுடைய மகள் சரண்யாவுக்கும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயகுணம் கிராமத்திலுள்ள பெரியசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சரண்யா தனது கணவருடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த சரண்யா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க சென்றனர்.ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுபற்றி சரண்யாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சரண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.