சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட இருப்பதால் முன்பதிவு செய்யும் 250 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மட்டுமல்லாது வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை முதல் திறக்கப்பட இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 5 நாட்கள் மட்டுமே ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். அதனால் கோவிலுக்கு பக்தர்கள் வந்து குவிந்து விடக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 250 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.