சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு முதன்முறையாக ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுக்கான வினாத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொண்டு விடைகளை ஏர்போர்ட் பேப்பரில் எழுதி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தனர். அதிலும் சில மாணவர்கள் விரைவுத் தபால் மற்றும் கொரியர் மூலமாக தங்களது விடைத்தாள்களை அனுப்பி வைத்தனர்.
இந்தத் தேர்வு முறையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த போதிலும் பல்கலைக்கழகம் வெற்றிகரமாக தேர்வை நடத்தி முடித்துவிட்டது. அவர்களுடன் இணைந்து இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்திருந்த மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. அந்தத் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் http://www.results.unom.ac.in, http://egovernance.unom.ac.in என்ற இணையதளம் மூலமாக வெளியிட்டது. தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது தேர்வு முடிவுகளை இந்த இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.