அரசு வேலை கொடுப்பதாக 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த குருதிப், அமித் குமார், ராம் தயாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டனர். அதில் பொதுப்பணித்துறையில் அரசு வேலைக்கு நேர்காணல் நடப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனைப் பார்த்த பல பட்டதாரி வாலிபர்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று குவிந்துள்ளனர்.
அப்போது விளம்பரம் கொடுத்த மூன்று பேரும் பட்டதாரிகளிடம் டெபாசிட் கட்ட வேண்டும் என்று கூறி பணம் வசூலித்து உள்ளனர். அரசு வேலை என்பதால் பட்டதாரிகள் பணத்தை கட்டி உள்ளனர். சுமார் 12 லட்சம் ரூபாய் அவர்களிடமிருந்து வசூலித்த மூன்று பேரும் இரவோடு இரவாக அந்த இடத்தை காலி செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். ஏமாற்றப் பட்டதை அறிந்த பட்டதாரிகள் டெல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான அமித் குமாரை கைது செய்து விசாரிக்க தொடங்கினர். அப்போது பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. இவர்கள் 3 பேரும் பல இடங்களில் அரசாங்க முத்திரையை தவறாக பயன்படுத்தி இதுபோன்ற மோசடியில் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அமித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.