தென்மேற்கு பருவமழை காலம் வரும் 26-ஆம் தேதி வரை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல், குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தென்மேற்கு பருவ மழை வரும் 26-ம் தேதிவரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பாக வடகிழக்கு பருவமழை நேற்று முதல் 20-ஆம் தேதிக்குள் தொடங்குவது வழக்கம் ஆனால் தென்மேற்கு பருவ மழைக்கான காலகட்டமே வரும் 26-ம் தேதி வரை நீடிப்பதால் அதற்கும் ஒரு வாரத்திற்கு பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.