மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டு வகைகள் மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள மத்திய தொகுப்பிற்கான இந்த இடங்களில் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஒபிசி பிரிவினருக்கான 50 சத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவப்படிப்புகளில் தமிழகத்தில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட்டது. மேலும் இது பற்றிய சட்ட வரையறைகளை மூன்று மாதங்களில் உருவாக்கும் படியும் அதற்காக சிறப்பு குழுவை அமைக்கம் படியும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் நடப்பாண்டில் மத்திய தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.